தமிழ்நாடு

மதியம் 1 மணி நிலவரம்: 56.81% வாக்குகள் பதிவு- கடந்த தேர்தலை விட 16% கூடுதல்!

By Christon
23 Apr 2026, 02:14 PM
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் கடந்த தேர்தல்களை விடக் கணிசமாக அதிகரித்துள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் கடந்த தேர்தல்களை விடக் கணிசமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மதிய வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருவதால் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 5.73 கோடி வாக்காளர்களைக் கொண்ட தமிழகத்தில், மதியம் 1 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முனைப்பு காட்டும் மாவட்டங்கள்

மண்டல வாரியான நிலவரப்படி, மதியம் 1 மணி வரை அதிகபட்சமாகத் திருப்பூர் மாவட்டத்தில் 62.97% வாக்குகள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. குறைந்தபட்சமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் 50.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது இதே 1 மணி நிலவரப்படி 40.08% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், இந்த முறை சுமார் 16.73% கூடுதல் வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு முனைப் போட்டியும் விரிவான ஏற்பாடுகளும்

திமுக தலைமையிலான மெகா கூட்டணி, அதிமுக தலைமையிலான பலமான கூட்டணி, முதல் தேர்தலைச் சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி எனத் தமிழகத்தில் இந்த முறை பலமான நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. 4,023 வேட்பாளர்களின் விதியைத் தீர்மானிக்க 1.06 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.