Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

By VASUKI
31 May 2025, 03:20 PM
பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தொடர் மழை காரணமாக நெல்லை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 118 அடியை எட்டியுள்ளது. இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 144 அடியை தாண்டியுள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்தது 91 அடி கடந்துள்ளது.

கன்னியாகுமரியில் தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் பெய்துவரும் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக 48 கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை தாண்டியதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று வெள்ளப்பெருக்கு குறைந்த போதிலும் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 7வது நாளாக தொடர்கிறது.

முல்லைப் பெரியாறு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ துணிகள் துவைக்கவோ செல்ல வேண்டாம் என தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் நகரின் முக்கிய பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுப்பு விடுக்கப்பட்டது.

இதேபோல் கோவையில் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 38 அடியை தாண்டியுள்ளது. கனமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.