விளையாட்டு

RCB vs SRH: சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் ஐதராபாத்.. அதிரடி காட்டுமா பெங்களூரு?

By Christon
22 May 2026, 03:26 PM
ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு அணிகள் இன்று ஐதராபாத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் ஆட்டத்தில், ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்துள்ள ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு வலிமையான அணிகள் இன்று ஐதராபாத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

19-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பெங்களூரு, குஜராத் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. இந்தச் சூழலில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி, ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. நடப்புத் தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்த பெங்களூரு அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் களம் காண்கிறது. மறுபுறம், முந்தைய தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துப் பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் வர ஐதராபாத் அணி பதிலடி கொடுக்கக் காத்திருக்கிறது.

அணிகளின் பலம் மற்றும் முக்கிய வீரர்கள்

13 ஆட்டங்களில் 16 புள்ளிகளுடன் உள்ள ஐதராபாத் அணியில் ஹென்ரிச் கிளாசென் (555 ரன்கள்), அபிஷேக் ஷர்மா (507 ரன்கள்), இஷான் கிஷன் (490 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கிலும், இஷான் மலிங்கா (17 விக்கெட்டுகள்) பந்துவீச்சிலும் பலமாக உள்ளனர்.

அதேபோல், 13 ஆட்டங்களில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள பெங்களூரு அணியில் விராட் கோலி (542 ரன்கள்), தேவ்தத் படிக்கல் ஆகியோர் பேட்டிங்கிலும், புவனேஷ்வர் குமார் (24 விக்கெட்டுகள்) பந்துவீச்சிலும் மிரட்டி வருகின்றனர். கடந்த போட்டியில் ஆடாத கேப்டன் ரஜத் படிதார் இன்றைய போட்டியில் களம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர் புள்ளி விவரம்

ஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 14 முறையும், பெங்களூரு அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னதாகத் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்குக் குறைவிருக்காது.