ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்கும் கட்டாயத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
நடப்பு தொடரில் 12 போட்டிகளில் விளையாடி தலா 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது சிஎஸ்கே. சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த போட்டியில் லக்னோவிடம் அடைந்த தோல்வியிலிருந்து மீண்டு, சொந்த மைதானத்தில் பலத்தை நிரூபிக்க சென்னை அணி தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டுள்ளது.
சென்னை அணியின் வியூகம்
கடந்த போட்டியில் சொதப்பிய முன்வரிசை பேட்ஸ்மேன்களான ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், உர்வில் பட்டேல் ஆகியோர் இன்று ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். இவர்களுடன் ஷிவம் துபே, டெவால்ட் பிரேவிஸ் ஆகியோரும் பேட்டிங்கில் கைகொடுத்தால் மட்டுமே வலுவான இலக்கை எட்ட முடியும். பந்துவீச்சில் அன்ஷுல் காம்போஜ், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி ஆகியோருடன் இன்றைய போட்டியில் அகீல் ஹொசைன் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தின் பிளே-ஆஃப் இலக்கு
மறுபுறம், 14 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இன்றைய போட்டியில் வென்று தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யக் காத்திருக்கிறது. கடந்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 86 ரன்களுக்குச் சுருண்டு அதிர்ச்சி தோல்வியடைந்ததால், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்றிச் கிளாசென் ஆகியோரை உள்ளடக்கிய பேட்டிங் வரிசை இன்று மீண்டும் அதிரடி காட்ட முயலும். கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான பந்துவீச்சும் சிஎஸ்கேவுக்கு சவால் அளிக்கத் தயாராக உள்ளது.