திமுகவில் நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில், ஏற்கனவே இருந்த 78 மாவட்டங்கள் தற்போது 110 மாவட்டங்களாக உயர்த்தப்படுவதாகக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, மற்ற தொகுதிகளை இழந்து திமுக பலத்த அடியைச் சந்தித்தது. குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலேயே தவெகவிடம் தோல்வியடைந்தது கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தத் தோல்விகளைத் தொடர்ந்து, சென்னையில் ஏற்கனவே இருந்த 6 மாவட்டங்கள் தற்போது 10 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் ஒரு மாவட்டச் செயலாளருக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே வரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் செயலாளர்கள் நியமிக்கப்படும்போது பல மூத்த மாவட்டச் செயலாளர்களின் அதிகாரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றத்தில், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரான சேகர் பாபுவின் கட்டுப்பாட்டில் இருந்த தொகுதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை திரு.வி.க நகர், வில்லிவாக்கம், எழும்பூர், கொளத்தூர், துறைமுகம், அம்பத்தூர் ஆகிய 6 தொகுதிகளைக் கவனித்து வந்த அவரது கட்டுப்பாட்டில், இனி துறைமுகம், திரு.வி.க நகர், வில்லிவாக்கம் ஆகிய 3 தொகுதிகள் மட்டுமே சேர்க்கப்படவுள்ளன.
முக்கியமாக, கொளத்தூர் தொகுதியைச் சேகர் பாபுவிடமிருந்து பிரிப்பதே இந்த மாற்றத்தின் பிரதான நோக்கம் எனக் கூறப்படுகிறது. கொளத்தூர் மற்றும் பெரம்பூர் தொகுதிகள் இணைக்கப்பட்டு 'சென்னை வடக்கு மாவட்டம்' எனப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. துறைமுகம் தொகுதி 'சென்னை கிழக்கு மாவட்டத்தின்' கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியடைந்ததற்குச் சேகர் பாபுவின் மேலாண்மைக் குறைபாடே காரணம் எனப் பல நிர்வாகிகள் கொந்தளித்து வந்த சூழலில், துறைமுகத்தையும் கொளத்தூரையும் தனித்தனியாக பிரித்துச் சேகர் பாபுவிடம் இருந்து கொளத்தூரின் பொறுப்பு பறிக்கப்பட இருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.