அரசியல்

"உங்களுக்கு ஆளுநர் முக்கியமா, தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியமா?"- உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!

By Christon
22 Jun 2026, 03:09 PM
தேசிய கீதத்தை இருமுறை பாடி அவையின் மரபுகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறி த.வெ.க. அரசு மற்றும் சபாநாயகர் மீது உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவையின் மரபுகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறி த.வெ.க. அரசு மற்றும் சபாநாயகர் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்குத் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து த.வெ.க. அரசை விமர்சித்த அவர், புதிய ஆட்சி அமைந்து 40 நாட்களைக் கடந்த நிலையிலும் ஆளுநர் உரையில் எவ்வித புதிய சாதனைகளோ, திட்டங்களோ இல்லாதது ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், "ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று பேரறிஞர் அண்ணா கூறினார். தற்போதைய ஆளுநர் உரையானது வெறும் சமூக வலைதள 'ரீல்ஸ்' போடுவதற்கு உதவுமே தவிர, கள யதார்த்தத்திற்கு உதவாது" என்று சாடினார்.

கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறையும், தேசிய கீதம் இரு முறையும் பாடப்பட்டதன் மூலம் அவையின் மரபு மீறப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதற்கு முன்பும் ஆளுநர்கள் இருமுறை தேசிய கீதம் பாடக் கோரிய போது, அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை நிராகரித்துப் பேரவையின் இறையாண்மையைக் காத்தார் எனச் சுட்டிக்காட்டிய அவர், "நமது எல்லையை ஏன் ஆளுநரிடம் விட்டுக் கொடுத்தீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டதில் என்ன தவறு என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கேள்வி எழுப்பிய போது, "தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவதுதான் மரபு. தேசிய கீதத்தை இருமுறை பாடிய நீங்கள், தமிழ்த்தாய் வாழ்த்தையும் இருமுறை பாடியிருக்க வேண்டியதுதானே? உங்களுக்கு ஆளுநர் முக்கியமா அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியமா?" என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சபாநாயகர், "அவையைப் பொறுத்தவரை யாரையும் தலையில் வைத்து கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை; அவைத் தலைவரின் விருப்பத்திற்கு ஏற்பவே சபை நடைபெறும்" என்று விளக்கமளித்தார்.