அரசியல்

"எங்களுக்கு கார் வேண்டாம்": சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

By Christon
21 Aug 2026, 12:04 PM
அரசு சார்பில் வழங்கும் காரை திமுக எம்எல்ஏக்களை பெறப்போவதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான கூட்டத்தொடர் நடைபெற்றது. கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின் போது, காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வசதி கோரி வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கார் மற்றும் உதவியாளர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பிலும் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், நேற்று எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்குவதற்காக மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் சோதனை ஓட்டத்திற்காகத் தலைமைச் செயலகத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

அரசு அறிவித்த இந்த வாகன வசதியை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் திட்டவட்டமாகத் அறிவித்துள்ளார். மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் இந்தச் சூழலில், மக்கள் நிதியைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அரசு வழங்கும் வாகனம், வசதி படைத்த உறுப்பினர்களுக்கும் தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

மேலும், பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் உண்மையிலேயே வாகன வசதி தேவைப்படும் எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே அரசு சார்பில் கார் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.