அரசியல்

"முதல்வர் விஜயின் பேச்சு வழக்கமான சினிமா ஸ்கிரிப்ட்" - ஜெயக்குமார் விமர்சனம்!

By Christon
11 Jul 2026, 11:57 AM
முதல்வர் விஜய் இன்னும் சினிமா சூட்டிங் போலவே நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
கரூரில் நேற்று நடைபெற்ற அரசு விழா மற்றும் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் உரையாற்றிய நிலையில், அவர் இன்னும் சினிமா சூட்டிங் போலவே நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாகக் விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், கரூரில் முதலமைச்சர் விஜயின் நேற்றைய பேச்சு வழக்கமான ஒரு சினிமா ஸ்கிரிப்ட் போலத்தான் இருந்ததே தவிர, அதில் புதியதாக எதுவும் இல்லை என்றார். "ஆட்சிக்கு வந்தபின் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?" என்று கேள்வி எழுப்பிய அவர், டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வுக்காகக் காத்துக்கொண்டு படிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் வகையில் தற்போதைய முதலமைச்சரின் செயல்பாடு அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும், கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது போல, அரசுப் பணத்தைக் கொண்டு முதல்வர் விஜய் இந்த அரசுப் பணிகளை வழங்கியுள்ளார் என்றும் சாடினார்.

மக்களுக்காகத் தனது சொந்தப் பணத்தை வாரி வழங்கியவர் எம்.ஜி.ஆர் என்று குறிப்பிட்ட ஜெயக்குமார், விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் தான் மக்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளார் என்றார். "கோடி கோடியாகச் சம்பாதித்த விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது சொந்தப் பணத்தில் இருந்து தலா ரூ.1 கோடி கொடுத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் அந்தப் பணத்தின் வட்டியை வைத்தே அவர்கள் நன்றாக வாழ்ந்திருப்பார்கள்" என்று கூறினார்.

மேலும், குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்காத நிலையில் விவசாயிகள் படும் வேதனைகள் குறித்து முதலமைச்சர் பேசவில்லை என்றும், வரவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் வைத்தே அவர் கரூரில் பேசியுள்ளார் என்றும் விமர்சித்தார். இறுதியாக, ஊழல்வாதிகளைத் தனது அருகிலேயே வைத்துக் கொண்டு, மாநிலத்தில் ஊழலை ஒழிப்பதாக முதலமைச்சர் விஜய் பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.