Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

விஜய்யின் புதிய டிவி சேனல்: 'வெற்றி தொலைக்காட்சி' பிப்ரவரியில் தொடங்க திட்டம்?

By Christon
15 Dec 2025, 06:09 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தனது கட்சிக்காகப் புதிதாக ஒரு தொலைக்காட்சி சேனலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தனது கட்சிக்காகப் புதிதாக ஒரு தொலைக்காட்சி சேனலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சேனலுக்கு 'வெற்றி தொலைக்காட்சி' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் ஒளிபரப்பைத் தொடங்கும் எனவும் பனையூரில் உள்ள கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சிகளின் ஊடக உத்தி

தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தங்களது கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவும், ஆதரவு திரட்டவும் தங்களுக்கெனத் தனியாகத் தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. போன்ற கட்சிகள் ஏற்கனவே சொந்தமாகத் தொலைக்காட்சி சேனல்களை வைத்துள்ளன. அந்த வகையில், புதிதாகக் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், தான் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு என புதிய டிவி சேனல் ஆலோசனை மேற்கொண்டு இருந்தார். அதற்கான பேச்சுவார்த்தை தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

'வெற்றி தொலைக்காட்சி' விவரங்கள்

கட்சியின் பெயர் முதல் சொல்லான 'வெற்றி தொலைக்காட்சி' என்ற பெயரில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்கான வேலைகளைத் தொடங்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா மூலம் இந்தத் தொலைக்காட்சி தொடங்கப்பட இருக்கிறது. தொலைக்காட்சிக்கான நிதி ஆதாரங்களையும் ஆதவ் அர்ஜூனா மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் வெற்றி தொலைக்காட்சி தனது ஒளிபரப்பைத் தொடங்கும் எனப் பனையூர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.