கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் முதல்வரான நம்மால் ஏன் பிரதமர் ஆக முடியாது என்று துணிச்சலுடன் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டார் விஜய். அடிமடியிலேயே கைவைக்கிறார்கள் என இதை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் தகிக்கிறது சமீபத்திய தோழனான காங்கிரஸ். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முதல்வர் விஜய்யை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கான ஹைப்பை மட்டும் த.வெ.கவினர் தொடர்ந்துகொண்டே இருக்க, அதன் விளைவாக கதர்ச்சட்டைகள் கதறத் தொடங்கியிருப்பதுதான் அரசியல் களேபரம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், "பிரதமர் பதவியில் ஒரு தமிழர் இதுவரை அமர்ந்ததில்லை. எனவே எப்படியாவது பிரதமர் ஆகிவிட வேண்டும் என்ற கனவு தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளுக்கு வருவதுண்டு. தற்போது, அந்த பிரதமர் பதவியை குறி வைத்திருக்கிறார் முதல்வர் விஜய் மத்தியில் வலிமையான வேட்பாளர் இல்லாததால்தான், தொடர்ந்து மோடியே பிரதமராகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுவதுண்டு. எனவே தனக்கு தற்போது இருக்கும் மாஸ் இமேஜை வைத்து, முதலில் தென் இந்தியாவை கைக்குள் கொண்டுவந்துவிட்டால், அடுத்து பிரதமர் பதவியையும் கைப்பற்றிவிடலாம் என்று நினைக்கிறார் விஜய்.
அவரது எண்ண ஓட்டத்தை உணர்ந்த அமைச்சர்களும், அதை வெளிப்படையாக எதிரொலிக்கத் தொடங்கிவிட்டனர். இதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் சரத்குமார், ஜெகதீஸ்வரி, செங்கோட்டையன், ஸ்ரீநாத் என வரிசை கட்டி 'விஜய் பிரதமராக வேண்டும்' என பொதுமேடைகளிலும், சட்டசபையிலும் தம் கட்டிவருகிறார்கள்.
இதையொட்டி கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்களில் விஜய்க்கு இருக்கும் ஆதரவு கூட்டத்தை வளைக்க தீவிரமாக திட்டம் தீட்டிவருகிறது த.வெ.க. விஜய் நடிகராக இருந்தபோது தமிழகத்தில் எந்த மூலையில் பட ஷூட்டிங் நடத்தினாலும், கட்டுக்கடங்காத கூட்டம் சேர்கிறது என்பதால் சில படங்களின் படப்பிடிப்பை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடத்தினர். ஆனால், அங்கும் பெரிய அளவில் கூட்டம் சேர்ந்தது.
ஒருகட்டத்தில், விஜய் பட ஷூட்டிங்கை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படமாக்குவதிலும் சிக்கல் ஏற்படும் அளவுக்கு கூட்டம் கூடத் தொடங்கியது. அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த மாநிலங்களிலும் விஜய்யின் படங்கள் நன்றாக ஓடின. அதே செல்வாக்கை தற்போது அரசியலிலும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார் விஜய். தமிழக சட்டசபைத் தேர்தலின்போது குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்து வாக்காளர்களை கவர்ந்ததுபோல, தென் மாநிலங்களிலும் குறிப்பிட்ட அளவிலான பிரசாரக் கூட்டங்களை நடத்தி வாக்குகளை அள்ளிவிடலாம் என நினைக்கிறார் விஜய், இந்த வியூகத்தில் சில சிக்கல்களும் இல்லாமல் இல்லை.
கேரளத்தைப் பொறுத்தவரை சினிமாவை ரசிப்பவர்கள் அதிகம். ஆனால் சினிமா ஸ்டார்களை முன்னிறுத்தி அவர்கள் அரசியலை அணுகவதில்லை. கர்நாடகத்தில் மொழி உணர்வு மிக அதிகம். இந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்டு, முடிந்தவரை பிரதமர் பதவியை கைப்பற்ற குறிவைப்போம். இது தவறினால், வட மாநில அரசியல் தலைவர்கள் அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதிக்கு நிகராக நாமும் ஒரு தேசியத் தலைவராக வலம் வரலாம் என கணக்கு போடுகிறார் விஜய். தேவைப்பட்டால் அதற்கேற்ப தனது கட்சிப் பெயரை மாற்றி அமைக்கவும் விஜய் முடிவு செய்திருக்கிறார்.
த.வெ.கவின் இந்த பகீரத பிரயத்தனங்கள்தான் தற்போது காங்கிரஸ் தலைமையை சூடேற்றியிருக்கிறது. சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 108 சட்டமன்ற உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு, திக்கு தெரியாத காட்டில் சிக்கித் தவித்தது த.வெ.க அப்போது திமு.கவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ஓடிவந்து கை கொடுத்தது காங்கிரஸ். அதன்பிறகுதான் இடதுசாரிகள், வி.சி.க. ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் எல்லாம் ஆதரவு கொடுத்து, த.வெ.கவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தின. 'அதையெல்லாம் மறந்துவிட்டு வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கை வைப்பதா? என கொதிக்கிறது காங்கிரஸ்.
குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தவெகவின் அரசியல் நிலைப்பாடு மற்றும் பிரதமர் கனவை நிறைவேற்றுவதற்கான திட்டம் குறித்து ராகுலிடம் இஞ்ச் பை இஞ்ச் வாசித்திருக்கிறார். இதைக்கேட்ட ராகுல் தனது அதிருப்தியை மாணிக்கம் தாகூரிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு மாணிக்கம் தாகூர், 'தவெக தன் நிலைப்பாட்டை மாற்றிக் இருந்து வெளியேறி, வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கலாம். இது தவெகவை யோசிக்க வைக்கும் என யோசனை தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ராகுலை டெல்லியில் சந்தித்த ப.சிதம்பரம், தவெக. தொடர்ந்து முறுக்கிக்கொண்டிருந்தால், மீண்டும் தி.மு.க. கூட்டணியை தொடர சில அரசியல் டிப்ஸ்களை வழங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. என சொல்லி முடித்தார்.
முன்னதாக, விஜய்யின் பிரதமர் கனவை வி.சி.க. மற்றும் இடதுசாரிகள் ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டிவருகின்றன. இதனால்தான், 'மக்கள் தீர்ப்புக்கு மாறாகவோ அல்லது ஜனநாயக விரோதமாகவோ த.வெ.க அரசு செயல்பட்டால் தங்களது ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும்' என மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் வார்னிங் அலர்ட் கொடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக, 'விஜய்யின் அமைச்சர்கள் அனைவரும் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்திருந்தார் மாணிக்கம் தாகூர். அவரிடமும் இந்த விவகாரம் பற்றி கேட்டோம். "தவெக ஆட்சி அமைக்க முதலில் ஆதரவு தந்தது காங்கிரஸ்தான். காங்கிரஸ் இல்லாவிட்டால் த.வெ.க.வால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. அமைச்சர்களும் அதை மறந்துவிடக்கூடாது. த.வெ.கவுக்கு எப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்களோ, அப்போது அவர்களை இண்டியா கூட்டணியில் சேர்ப்பது பற்றி பரிசீலிப்போம்." என்றார் காட்டமா.
ஆசை 60 நாள், மோகம் 30 நாள்.?