Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

தவெக பூத் கமிட்டி மாநாட்டில் விஜய்...தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

By Jayakumar
26 Apr 2025, 03:41 PM
விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்தார்.
தவெக பூத் கமிட்டி மாநாடு

கோவை புறநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் தனியார் கல்லூரி வளாகத்தை நோக்கி அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் புறப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜய், கோவையில் நடைபெறும் கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரது வருகையால் அவிநாசி சாலையில் காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விஜய்க்கு உற்சாக வரவேற்பு

கோவை விமான நிலையத்தில் விஜய்க்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பின்னர், அவர் அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர விடுதிக்கு ஓய்வெடுப்பதற்காக சென்றார். சுமார் 4 மணி நேர ஓய்வுக்குப் பிறகு, மாலை 3 மணியளவில் விடுதியிலிருந்து புறப்பட்ட விஜய்க்கு, விடுதிக்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்தார். மாலை 4 மணியளவில் மாநாட்டு வளாகத்தை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகை அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

ரசிகர்களின் கூட்ட நெரிசலால் அவிநாசி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகன ஓட்டிகள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. மாநாடு இரவு 7 மணி வரை நடைபெற உள்ளதால், போக்குவரத்து நெரிசல் தொடர வாய்ப்புள்ளதாக கோவை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி சிரமமின்றி பயணிக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.