அரசியல்

தேர்தல் முடிவுகளுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரம் சரிபார்ப்பு: உதயநிதி வழக்கில் ஐடி பதில்!

By Christon
24 Apr 2026, 04:09 PM
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, வேட்பாளர்களின் வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்களை தாமாக முன்வந்து சரிபார்க்கும் நடைமுறை துவங்கப்படும் என உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்து வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர் குமாரவேல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குக்கு பதிலளித்து வருமான வரித் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறியுள்ள சொத்து விவரங்கள் குறித்து சரிபார்க்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நேரடி வரிகள் வாரியம் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்களை வருமான வரித்துறை தாமாக முன்வந்து சரிபார்க்கும் நடைமுறையை துவங்க வேண்டும் எனவும், 150 நாட்களுக்குள் சாரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டும் எனவும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் சொத்து விவரங்களை பொறுத்தவரை விரிவான ஆய்வு மேற்கொள்ளாமல், 2021 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு தொடர்பான ஒப்பீடை தற்போது மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் நிதி குறித்த ஆவணங்கள் தற்போது வருமான வரித்துறை வசம் இல்லை என்றும், தற்போதைய நிலையில் எந்த இறுதியான முடிவுக்கும் வர முடியாது என்றும்; அதனால் ஆவணங்களை ஆய்வு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.