த.வெ.க.வுடன் ஆட்சியில் பங்குபெற்ற பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒவ்வொரு நகர்வும் தொடர் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது. திருமாவுமேகூட 'தனித்தன்மையை இழந்துவிட்டார், கட்சியை அடகு வைத்துவிட்டார்' என்றெல்லாம் ஏகத்துக்கும் விமர்சிக்கப்படுகிறார். சமீபத்தில் நடந்த வி.சி.க. மாநாட்டிலும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, திருமாவளவன் மூச்சுமுட்டி தன் உரையை பாதியில் முடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. இப்படியான சூழலில்தான் அக்கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜியை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.
உளுந்தூர்பேட்டை மாநாட்டில் என்னதான் நடந்தது?
"மாநாட்டில் இரண்டு, மூன்று குளறுபடிகள் சேர்ந்து கொண்டதால் அவ்வாறான சூழல் ஏற்பட்டுவிட்டது. மேடையில் பொறுப்பாளர்கள் நாங்கள் அமர 300க்கும் மேற்பட்ட நாற்காலிகள் போட்டிருந்தோம். அத்தனை பொறுப்பாளர்களும் மேடைக்கு வரவே, அவர்களுக்கு தெரிந்த தொண்டர்களும் மேடைக்கு வந்துவிட்டனர். மேலும், நீண்ட 'ராம்ப் வாக்' மேடை அமைத்திருந்தோம். தொண்டர்கள் தலைவரை பார்க்கும் உணர்ச்சிப்பெருக்கில் மேலே ஏற அது வாய்ப்பாகிவிட்டது. தலைவர் திருமாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 17 அன்று இந்த மாநாடு திட்டமிடப்பட்டிருந்தது.
பிறந்த நாளில் தலைவரை சந்திக்க வேண்டும் என்ற உணர்ச்சிப் பெருக்கில் அவ்வாறு சூழ்ந்துகொண்டனர். தொண்டர்களின் நலன் கருதிதான் மாநாட்டை தலைவர் சீக்கிரம் முடித்துக்கொண்டார். எது எப்படியோ அங்கு திரண்ட தொண்டர் படை வி.சி.க.வும் திருமாவும் இன்றி தமிழ்நாடு அரசியல் இனி நகராது என்ற உண்மையை உணர்த்தியிருக்கிறது. மாநாடு மாபெரும் வெற்றிதான்."
ஆனால், ‘அடங்கமறு அத்துமீறு' என்கிற கோஷத்தை அக்கட்சியின் தொண்டர்கள், தங்கள் தலைவரிடமே காட்டிவிட்டார்கள் என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் விமர்சிக்கிறார்களே?
"இது ஒழுக்கம் இல்லாமல் 'அடங்க மறு என்று சொல்கிற முழக்கம் இல்லை. 'ஆதிக்கத்திற்கு எதிராக அடங்க மறு' என்று சொன்ன முழக்கம். இந்த அர்த்தம் விமர்சனம் செய்பவர்களுக்கே தெரியும். ஆனாலும் வேண்டுமென்றே விமர்சிக்கிறார்கள்."
அதேசமயம், விஜய்யின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் நடந்த குளறுபடிகளை வி.சி.க. கடுமையாக விமர்சித்ததே?
"எங்கள் விமர்சனம் எந்த இடத்திலும் கொச்சையாக வரம்பு மீறி இருந்ததில்லை. எங்கள் தொண்டர்களில் ஒரு சிலர் இப்படி இருக்கிறார்கள் எனில் அவர்களை நாங்கள் அரசியல்படுத்த முயற்சிப்போம்."
இந்த மாநாட்டில் வி.சி.க. முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் ஏன் கலந்துகொள்ளவில்லை?
"கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவரான ஷா நவாஸ் மாநாட்டுக்கு வந்திருக்க வேண்டும். அவர் வராதது வருத்தம்தான். ஆனால், அவர் வராததற்கான விளக்கத்தை அவர்தான் சொல்ல வேண்டும். அது பற்றி எனக்கு தெரியவில்லை.
"ஷா நவாஸ் கட்சிக்குள் கட்சி இருந்துகொண்டே நிலைப்பாட்டிற்கு எதிராக பேசுகிறாரே? "
அதை கட்சிக்கு பிரச்னையாக நாங்கள் பார்க்கவில்லை. அவரின் தனிப்பட்ட கருத்தாகவே பார்க்கிறோம்?"
ஷா நவாஸ் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என்றால், முன்பு வி.சி.க.வில் பயணித்த ஆதவ் அர்ஜுனா, ஒரு புத்தக வெளியீட்டில் பேசியதற்காக அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதே?
"ஆதவ் அர்ஜுனா மீது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே ஒழுங்கு நடவடிக்கை எடுத்தோம். அதுபோல பொறுத்திருந்து, என்ன நடக்கிறது என்று பார்த்துதான் செயல்பட முடியும். எல்லாருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அல்லவா! ஒருவேளை ஷா நவாஸ், 'நான் என்னுடைய புரிதலில் அப்படி பேசிவிட்டேன் என தலைவரிடம் சொல்லலாம் அல்லது தலைவர் வேறு முடிவு எடுக்கலாம். இது தலைவருக்கும் ஷா நவாஸுக்கும் இடையிலான பிரச்னை"
வி.சி.க. பொறுப்பாளர்கள் இடையே ஏன் இந்த தொடர் முரண்?
"எங்கள் கட்சியில் முரணைக்கூட சொல்லும் ஜனநாயகம் உள்ளது. அதனால்தான் அவர்கள் முரண் என நினைக்கும் கருத்தை வெளிப்படையாக சொல்கிறார்கள். எங்கள் கட்சியை மையப்படுத்தி சிலர் யூடியூப்பில், 'கட்சி பிளக்கப்பட்டது' என்றெல்லாம் டைட்டில் வைப்பதை பார்த்தால் சிரிப்பாக உள்ளது. பிளப்பதற்கு இது என்ன பலாப்பழமா? வி.சி.க. ஒரு மாபெரும் இயக்கம். இதை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது."
'இனி த.வெ.க.வுடன் பயணிப்போம்' என வி.சி.க. தலைவர் திருமாவளவன் சொல்லக் காரணம் என்ன?
"இது உடனடியாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. படிப்படியாக யோசித்து எடுத்த முடிவு. இப்படிப்பட்ட ஒரு மாபெரும் முடிவை, அனைத்து தொண்டர்கள் மத்தியிலும் சொல்ல வேண்டும் என்றே மாநாட்டு அரங்கில் சொல்லப்பட்டது."
என்னென்ன காரணங்களால் த.வெ.க. கூட்டணியில் இணைவது என்ற முடிவு எடுக்கப்பட்டது?
"அவர்களின் ஒரு சில நடவடிக்கைகள் எங்களுக்கு நம்பிக்கை அளித்தன. எந்தக் காலத்திலும் நாங்கள் பா.ஜ.க.வோடு சமரசம் செய்யமாட்டோம். எல்லா கட்சியின் மீதும் ஏதோ ஒரு காலகட்டத்தில், இது பா.ஜ.க.வின் பி டீம் என்ற விமர்சனம் வந்துள்ளது. ஆனால் எங்கள் கட்சியின் மீது, ஒரு விமர்சனமாகக்கூட அப்படி ஏதும் வந்ததில்லை. அப்படி ஒரு பா.ஜ.க. எதிர்ப்பு நிலைகொண்ட கட்சி வி.சி.க. ஆக நாங்கள் தவெகவிற்கு ஷீல்டாக இருப்போம். ஒருவேளை பா.ஜ.க, தவெகவை நெருங்கினால் நாங்கள் அங்கு இருக்கமாட்டோம்."
வி.சி.க.வின் அடுத்தகட்ட நகர்வு என்ன?
“எங்கள் தலைவர் ஏற்கெனவே சொன்னதுபோல் ஆளுங்கட்சியாக பரிணமிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம்?
'தமிழ்நாடு முற்போக்கு மாநிலமாக இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர் ஒருவர் முதலமைச்சராகும் வாய்ப்பு இன்னும் இல்லை' என்று உங்கள் தலைவர் கூறியிருக்கிறாரே... அப்படி இருக்க இது எப்படி சாத்தியம்?
"நம்பிக்கைதான் வாழ்க்கை. அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!"