திமுக கூட்டணியில் இருந்து விலகி, தற்போது தவெக தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளை விமர்சித்த திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வன்னி அரசு, "அண்ணன் ஆ.ராசா சமீப காலமாக மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்ற வரம்பு இல்லாமல் பேசி வருகிறார்" என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை குறிவைத்து ஆ.ராசா தொடர்ந்து தேவையற்ற கருத்துகளை கூறி வருகிறார். இது கூட்டணி கட்சிகளை தூண்டிவிடும் வகையில் உள்ளது. அவரை திமுக தலைமை அழைத்து கண்டிக்க வேண்டும். கண்டிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார்.
2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுகவுக்கு ஆதரவு அளித்ததை நினைவுபடுத்திய வன்னி அரசு, "அப்போது திமுக 96 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவால்தான் ஆட்சி அமைந்தது. அப்போது ஆ.ராசா மகிழ்ச்சியாக இருந்தார். இப்போது மட்டும் ஏன் இவ்வாறு பேசுகிறார்?" என கேள்வி எழுப்பினார்.
மேலும், "அந்த ஐந்தாண்டுகளிலும் ஜெயலலிதா திமுக ஆட்சியை மைனாரிட்டி அரசு என்றே விமர்சித்தார். எனவே, ஆ.ராசாவின் இந்தப் பேச்சு அவருடைய குணத்துக்கே உரியது" என்றும் வன்னி அரசு சாடினார்.
ஆ.ராசாவின் விமர்சனத்துக்கு வன்னி அரசு கொடுத்த இந்த பதிலடி, திமுக - விசிக இடையேயான வார்த்தைப் போருக்கு மேலும் சூடு ஏற்றியுள்ளது.