மாமல்லபுரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து பெண் எம்எல்ஏக்கள் மட்டும் வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் எம்எல்ஏக்களிடம் தனியாக ஆலோசனை நடத்திய விஜய்!
சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். இதில் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த், அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், பெண் எம்எல்ஏக்கள் மட்டும் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். எம்எல்ஏக்கள் காமாட்சி, சிந்து, தாகிரா, கனிமொழி, குழந்தை ராணி உள்ளிட்டோர் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பெண் எம்எல்ஏக்களை தனியாக அமரவைத்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கடந்த 6 மாத ஆட்சியின் செயல்பாடுகள், தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அவர்களின் கருத்துகள் குறித்து விஜய் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண் எம்எல்ஏக்களுக்கு கடுமையான எச்சரிக்கையா?
இதற்கிடையே, சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள தவெக ஆண் எம்எல்ஏக்கள் குறித்து முதலமைச்சர் விஜய் கடுமையான ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைகளில் தொடர்புடைய எம்எல்ஏக்களிடம் சம்பவங்கள் குறித்து விஜய் நேரடியாக விசாரித்திருக்கலாம் என்றும், அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பெண் எம்எல்ஏக்களிடம் தனியாக ஆலோசனை நடத்திய பின்னர் அவர்கள் வெளியேறிய நிலையில், ஆண் எம்எல்ஏக்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பெண் எம்எல்ஏக்கள் வெளியேறியது தனிப்பட்ட ஆலோசனை நிறைவடைந்ததன் காரணமாகவா? அல்லது ஆண் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்படவுள்ள கண்டிப்பான அறிவுரைகளின் ஒரு பகுதியாகவா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
முதலமைச்சர் விஜயின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் என்னென்ன அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.