தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ-க்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சியை கவிழ்க்க கடந்த 40 நாட்களாக முயற்சி நடைபெற்று வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதன் பின்னணியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், "கடந்த 40 நாட்களாக அனைத்து தவெக எம்.எல்.ஏ-க்களிடமும் ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளது. ஒரு சில எம்.எல்.ஏ-க்கள் மிரட்டலுக்கும் ஆளாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்" என்றார்.
மேலும், "தவெக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் எங்கள் கட்சியின் பல எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொண்டு பேரம் பேசியுள்ளனர். திமுக தரப்பில் இருந்து பேரம் பேசப்படாத தவெக எம்.எல்.ஏ-க்களே இல்லை" என்று குற்றம்சாட்டினார்.
அதோடு, "திமுகவுடன் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறார். 'தவெக ஆட்சி கவிழும்' என்று ஸ்டாலின் தொடர்ந்து கூறுவதன் பின்னணியும் இதுதான். ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் ரூ.40 கோடி, ரூ.50 கோடி வரை கொடுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, "ரூ.50 கோடி கொடுத்து எம்.எல்.ஏ-க்களை வாங்க ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? மக்களுக்கு செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுவிட்டு, இனிமேல் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட வேண்டும்" என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், "தவெக எம்.எல்.ஏ-க்கள் பண பலத்தால் வெற்றி பெற்றவர்கள் அல்ல. வெறும் ரூ.2 லட்சம் செலவில் தேர்தலில் வென்றவர்கள். ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்து வெல்லவில்லை; தொகுதிக்கு ரூ.70 கோடி செலவழித்தும் வெல்லவில்லை. தவெக எம்.எல்.ஏ-க்களை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் மன்றத்தில் சந்திக்க தவெக தயாராக உள்ளது" என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.