தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், புதிய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் சில செயல்பாடுகள் பொதுவெளியில் விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.
இதனை ஒழுங்குபடுத்தும் விதமாக, பனையூர் தலைமையகத்தில் நாளை இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில், எம்.எல்.ஏ-க்கள் பொதுவெளியில் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், தேவையற்ற ஊடகச் சந்திப்புகளை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்றும் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளன.
இந்தக் கூட்டத்தில் மேலும் இரண்டு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. முதலாவதாக, வரும் ஜூன் 22-ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மக்களுக்குப் பயனுள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர்களும் எம்.எல்.ஏ-க்களும் இணைந்து எவ்வாறு வழங்க வேண்டும் என்பது குறித்து திட்டமிடப்படவுள்ளது.
இரண்டாவதாக, வரும் ஜூன் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில், முதன்முறையாகப் பங்கேற்கும் தவெக எம்.எல்.ஏ-க்கள் அவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவான வழிகாட்டுதல்களும் பயிற்சியும் வழங்கப்படவுள்ளதாகப் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.