தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ-விடம் பணம் பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகியும் மதுரை முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னனை சொந்த ஜாமினில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ மதார் பதுரூதீன் (எ) முஸ்தபாவின் உதவியாளர் மூலமாக, தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது எதிர்த்து வாக்களிக்க ரூ.15 கோடி முதல் ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாநகர காவல் துணை ஆணையர் தேவி தலைமையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தி, பின்னர் அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பி.எம்.மன்னனை காவல்துறையினர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் சாய், நவம்பர் 7-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், பி.எம்.மன்னனை இன்றே விசாரணைக்கு அழைத்து வந்து அவசரமாகக் கைது செய்தது ஏன் என்று காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினார். மேலும், அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க மறுப்பு தெரிவித்து, ரூ.25,000 சொந்த ஜாமினில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பி.எம்.மன்னன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பதாகவும், வழக்கு விசாரணைக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். ஜாமினில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி நாளை காலை 10 மணிக்கு மதுரை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் விசாரணைக்காக மீண்டும் ஆஜராகவுள்ளார்.