தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று புதிதாக 2 தனித் தீர்மானங்களை அரசு கொண்டு வருகிறது. நீட் தேர்வு எதிர்ப்புத் தீர்மானம் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் என இரண்டு தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளனர்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து மேகதாது விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை உள்ளிட்ட விவகாரங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்:
இதனைத்தொடர்ந்து, இன்று ஆகஸ்ட் 11-ஆம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வை ரத்து செய்து, மாநில பாடத்திட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை கொண்டு வருகிறார்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தேர்வு மீதான நம்பிக்கை குறைந்துள்ளதாகவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி 2021ஆம் ஆண்டு சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில், அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கவில்லை.
எஃப்சிஆர்ஏ(FCRA )திருத்த மசோதாவுக்கும் எதிர்ப்பு:
இரண்டாவது தீர்மானமாக, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவை தற்போதைய வடிவிலேயே திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.
தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'வெளிநாட்டு நன்கொடை முறைப்படுத்தல் (திருத்த) மசோதா 2026(FCRA Amendment Bill) மூலம் வெளிநாட்டு நிதியைப் பெறுதல் மற்றும் அந்த நிதியின் மூலம் உருவாக்கப்படும் சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு இந்த இரண்டாவது தீர்மானத்தை கொண்டுவர உள்ளது.
இந்த 2 தீர்மானங்கள் மீதும் சட்டசபையில் விவாதம் நடைபெற உள்ளது. அதன்பின், தொடர்ந்து பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3ஆம் நாள் விவாதம் நடைபெறுகிறது.
நீட் தேர்வு மற்றும் FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானங்கள் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்படுமா என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசிற்கு எதிரான இந்த தீர்மானங்களுக்கு NDA கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதே அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.