Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 9 புதிய அறிவிப்புகளை அறிவித்த முதல்வர்

By nagalekshmi
28 Apr 2025, 11:09 AM
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 9 புதியஅறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும், சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு

1. அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை 15 நாட்களில் சரண் செய்து அதற்குரிய பணப்பலனை பெறும் நடைமுறை இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது.

2. மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும்.

3. அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

4. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி பயில வழங்கப்படும் முன்பணம் தொழிற்கல்வி பயில ஒரு லட்சம் ரூபாயும், கலை, அறிவியல், பாலிடெக்னிக் பயில 50 ஆயிரம் ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும்.

5. அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

6. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பரிசுத்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

7. ஓய்வூதியதாரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

8. ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு தனது பரிந்துரைகளை வரும் செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்க உத்தரவு.

9. அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுமுறை காலத்தை அவர்களின் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.