Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதல்வர்.. இபிஎஸ் காட்டம்

By Jayakumar
17 Jun 2025, 03:28 PM
"தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் நடவடிக்கை எடுப்பார் என துளியும் நம்பிக்கை இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடலூர் அருகே 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் இன்று சுட்டு பிடித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

முதலமைச்சர் மீது துளியும் நம்பிக்கை இல்லை..

ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.

மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்..

6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, "அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய" அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026 தேர்தலில் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.