Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது- செல்வப்பெருந்தகை கண்டனம்!

By Christon
12 Sep 2025, 12:27 PM
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம், செருதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாகை மீனவர்கள் மீது தாக்குதல்

நாகை மாவட்டம், செருதூர் கிராமத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், மூன்று பைபர் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடல் கொள்ளையர்கள் அவர்களை வழிமறித்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் மூன்று மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

செல்வப்பெருந்தகை கண்டனம்

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில், "ஒருபக்கம் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் படலம் நடந்து கொண்டு இருக்க மற்றொரு பக்கம் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களின் பொருட்களை திருடிச் செல்லும் அதிர்ச்சிகர சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை தாக்குவதோடு அவர்களிடம் இருந்து கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி மீனவர்களை பாதுகாக்க வேண்டும். மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக தூதரக ரீதியில் நடவடிக்கை எடுத்து மீனவர்கள் பிரச்னையை முடிவுக் கொண்டு வரவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.