Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

"பாஜகவின் ஆட்டத்திற்குக் காரணமே அதிமுகதான்; இது தமிழினத் துரோகம்": திருமாவளவன் ஆவேசம்!

By Christon
27 Dec 2025, 01:50 PM
தமிழகத்தில் பாஜக இவ்வளவு ஆட்டம்போடக் காரணம் அதிமுகதான் என்றும், இது தமிழ் இனத்திற்குச் செய்யும் துரோகம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பாஜக இவ்வளவு ஆட்டம்போடக் காரணம் அதிமுகதான் என்றும், இது தமிழ் இனத்திற்குச் செய்யும் துரோகம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக வலுப்பெற்றால் தமிழகத்தில் பெரியார் அரசியலும், சாதாரணமாக வாழும் உரிமையும் பாதிக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'பாஜக வளர அதிமுக இடம் கொடுத்திருக்கிறது'

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தமிழகத்தில் பாஜக இவ்வளவு ஆட்டம்போட காரணமே அதிமுகதான். இது மிகப்பெரிய தமிழினத் துரோகம். பாஜக வளர அதிமுக இடம் கொடுத்திருக்கிறது. மீண்டும் அவர்களை தூக்கி தோளில் வைத்து சுமக்கிறார்கள்.

பாஜக தமிழகத்தில் வலுப்பெற்றுவிட்டால் அதிமுக இல்லாமல் போய்விடும், பெரியார் அரசியலும் இல்லாமல் போய்விடும். இங்கு கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ சுதந்திரமாக நடமாட முடியாது, ஏன் சாதாரண இந்துக்கள்கூட நடமாட முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

'கருத்தியலில் உறுதியாக இருந்தது திமுக'

மேலும் அவர், "பொது சிவில் சட்டம், பாபர் மசூதி இடிப்பு, ஜம்மு காஷ்மீர் பிரச்சினை ஆகியவை குறித்து, அதாவது மதவாத அரசியலே பேசக்கூடாது என நிபந்தனை விதித்த பிறகுதான், கருணாநிதி பாஜகவுடன் கூட்டணி வைத்தார். தேர்தல் கூட்டணி என்பது வேறு. அதிமுக இப்போது செய்வது வேறு.

பாஜகவுடன் நட்பில் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். கூட்டணியில் இருந்த அதே நேரத்தில் கருத்தியலில் உறுதியாக இருந்தது திமுக.

ஆனால், அதிமுக கருத்தியல் அடிமையாக மாறி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் அரசியலையே, அதிமுகவும் பேசுகிறது. இது தமிழகத்துக்கு உகந்தது அல்ல. அவர்கள், திமுகவுக்கு எதிராக அல்ல, நாமெல்லாம் பேசக்கூடிய அரசியலுக்கு எதிராக பேசுகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.