Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

திமுக அரசின் கபட நாடகம்.. டிடிவி தினகரன் விமர்சனம்

By Jayakumar
16 Jun 2025, 07:21 PM
வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை முதலமைச்சர் சந்திக்க மறுத்து அவர்களை கைது செய்திருப்பதன் மூலம், விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று மதியம் விமானம் மூலமாக சென்னையில் இருந்து திருச்சி வந்தார். திருச்சியில் இருந்து சாலை வழியாக தஞ்சை வந்த முதலமைச்சர் அரசு நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தஞ்சையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற முதலமைச்சருக்கு விவசாயிகள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், விவசாயிகள் கைது செய்யப்பட்டதுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தரக் கோரி முதலமைச்சரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சருக்கு கண்டனம்..

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், விவசாயிகளின் பெயரில் தனியார் ஆலை வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் போராடி வரும் நிலையில் அது தொடர்பாக மனு அளிக்க வந்த விவசாயிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு ஆலைகளும், தனியார் ஆலைகளும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 34-வது வாக்குறுதி, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பதும், கடந்த 2023 ஆம் ஆண்டு இதே கோரிக்கையை வலியுறுத்தி அப்போது தஞ்சை வந்த முதலமைச்சரிடம் வழங்கப்பட்ட மனு கிடப்பில் போடப்பட்டிருப்பதுமே, தற்போது முதலமைச்சருக்கு எதிராக விவசாயிகள் ஒன்று திரண்டு கருப்புக்கொடி ஏந்தி போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

திமுக அரசின் கபட நாடகம்..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாய பெருமக்களின் நலன் காக்கவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாக வீரவசனம் பேசி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை சந்திக்க அனுமதி மறுத்து அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பதன் மூலம் விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நிலுவைத் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை..

எனவே, கருப்புக் கொடி காட்ட முயன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, ஆலை நிர்வாகத்துடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளுக்கு வழங்கத் வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தந்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.