அரசியல்

"முதல்வர் பேச்சு.. 10 ரீலிஸ் தேறும்.." முதல்வர் விஜய் உரைக்கு உதயநிதி பதிலடி!

By Christon
23 Jun 2026, 12:43 PM
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
தமிழகச் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் உரையை மிகக் கடுமையாக விமர்சித்தார். "முதலமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா பாணியைக் கடைப்பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காகவே அவர் பேசியுள்ளார். பேரவையில் இன்று அவர் பேசிய 30 நிமிட உரையில், நிச்சயம் ஒரு 10 ரீல்ஸ் தேறும். சட்டமன்றத்தை அவர் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி, கொண்டு வந்த ஸ்கிரிப்ட் வசனத்தை ஒப்பித்துவிட்டுச் சென்றுள்ளார்" என்று சாடினார்.

மரபு மீறல் மற்றும் புரோட்டோகால் சர்ச்சை

அவையின் மரபுகள் குறித்துப் பேசிய உதயநிதி, "தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறையும், தேசிய கீதம் இரு முறையும் பாடப்பட்டது குறித்த நமது கேள்விக்கு முதலமைச்சரிடம் பதில் இல்லை. குடியரசுத் தலைவர் பேரவைக்கு வரும்போது மட்டுமே அங்கு முதலில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பதுதான் புரோட்டோகால் (Protocol). 2021-இல் கலைஞர் நூற்றாண்டுப் படத்திறப்பின் போது சட்டமன்றத்தில் முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது என்ற தகவலைக் குறிப்பிடும் முதலமைச்சருக்கு, ஒரு அடிப்படை புரோட்டோகால் கூடத் தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது" என்றார்.

திமுக மீதான புகார்களுக்கு விளக்கம்

திமுக அரசுக்கு எதிராக முதலமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்தார்.

சட்டம் - ஒழுங்கு: "திமுக ஆட்சியில் டிஜிபி நியமிக்கப்படவில்லை என்று முதல்வர் கூறுகிறார். ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றிவிடுவேன் என்று கூறித்தானே ஆட்சிக்கு வந்தீர்கள்? கடந்த 40 நாட்களில் உங்கள் காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? ஒவ்வொரு நாளும் வன்முறைகள் நடக்கின்றன, ஒரே நாளில் 24 சம்பவங்கள் வரை நடந்துள்ளன" என்று குற்றம் சாட்டினார்.

பயிர்க்கடன் தள்ளுபடி: விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை திமுகதான் தூண்டிவிடுகிறது என்று முதலமைச்சர் கூறியிருப்பது, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் செயல் என்று மறுப்பு தெரிவித்தார்.

கட்சி நிதி (Party Fund): டாஸ்மாக்கில் கட்சி நிதி வசூலிக்கப்பட்டதாகக் கூறிய முதலமைச்சர், அது எந்தக் கட்சியின் நிதிக்குச் சென்றது என்பதற்கான தகுந்த ஆதாரத்தைச் சொல்ல வேண்டும் என்று சவால் விடுத்தார்.

மாணவர் நலத் திட்டம்: திமுக அரசின் 'நான் முதல்வன்' திட்டம் மூலம் 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்த நிலையில், அதனைத் தற்போதைய அரசு முடக்கியது குறித்த கேள்விகளுக்கு முறையான பதில் இல்லை என்றார்.

அதிமுக டூ தவெக

த.வெ.க. யார் தயவிலும் ஆட்சி அமைக்கவில்லை என்று கூறுவதை விமர்சித்த உதயநிதி, "ஆட்சி அமைந்தவுடன் அதிமுகவின் ஒரு தரப்பினரை மட்டும் முதல்வர் ஏன் சென்று பார்த்தார்? ஒவ்வொரு கட்சித் தலைவரைச் சந்திக்கப் போகும்போதும், முதலமைச்சருக்கு முன்னதாகப் புதிய சோஃபாக்கள் அங்கு சென்றன. தற்போது அமைச்சர் அலுவலகத்திலேயே சென்று அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்து வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.