அரசியல்

தமிழக முதல்வர் எனது நெருங்கிய நண்பர்.. நயினார் ஓப்பன் டாக்

By Christon
23 Jul 2025, 04:29 PM
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் ஸ்டாலின் அலுவல்களை மேற்கொள்வதை வரவேற்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி பாஜக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகிறார். அப்போது, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து 4,500 கோடி ரூபாய்க்கு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

அதனை தொடர்ந்து, பிரதமர் மோடி மறுநாள் திருச்சி வந்து தங்குகிறார். பின்னர் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் கோயிலை பார்வையிட்டு கலை, கலாச்சார விழாவில் கலந்து கொள்கிறார்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நன்றாக உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் கே .எஸ். அழகிரி கூறியது குறித்த கேள்விக்கு, “இரண்டு நாட்களுக்கு முன்பு திருவள்ளுவர் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 10 படுகொலை நடந்துள்ளது. 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. லாக்கப் டெத் நடக்கிறது. ஏழு பவுன் நகைக்காக வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். யாருக்காக சொல்கிறார் கே.எஸ்.அழகிரி. இதெல்லாம் அவர் வீட்டில் நடந்தால் அவருக்கு தெரியும்.

முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “தமிழக முதலமைச்சர் எனக்கு நெருங்கிய நண்பர். எனது தொகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை செய்து கொடுத்துள்ளார். அவர் பூரண நலம் பெற வேண்டுகிறேன். மருத்துவமனையில் இருந்து கோப்புகளை பார்க்கிறார் என்றால் அதனை வரவேற்கிறேன்” என்றார்.

குர்ஆன் மீது ஆணையாக பாஜகவுடன் கூட்டாளி இல்லை என ஆதவ் அர்ஜுனாவின் கருத்து குறித்த கேள்விக்கு, “அது அவருடைய தனிப்பட்ட கருத்து. குர்ஆன், பகவத்கீதை போன்ற புனித நூல்களை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது” எனத் தெரிவித்தார்.