அரசியல்

அப்பாவு-வுக்கு எதிரான வழக்கு ரத்து.... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By nishika
25 Oct 2024, 10:03 PM
சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார். இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சபாநாயகர் அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தற்போது இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று (அக்.25) விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக கூறியது தகவல் தானே தவிர அவதூறு அல்ல எனவும், சபாநாயகரின் பேச்சு அதிமுக, பாபு முருகவேலுக்கு எதிரானதல்ல எனவும், பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் 40 எம்.எல்.ஏ.க்கள் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதற்கு அவர்களின் பெயரை சபாநாயகர் தனது பேச்சில் குறிப்பிடவில்லை எனவும் வாதிட்டார். மேலும் சம்பவம் நடந்த போது, அதிமுக உறுப்பினராக இல்லாத புகார்தாரருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், பாதிக்கப்படாதவர் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதையடுத்து புகார்தாரர் பாபு முருகவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், சபாநாயகரின் பேச்சு நிச்சயமாக அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், புகார்தாரர், கட்சியில் சாதாரண உறுப்பினர்  மட்டும் அல்ல. வழக்கறிஞர் அணி இணை செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். அதனால் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய புகார்தாரருக்கு உரிமை உள்ளது என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சபாநாயகரின் பேச்சு தொடர்பாக கட்சி சார்பில் எந்த புகார் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தனிப்பட்ட முறையில் புகார்தாரர் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் வழக்கை தாக்கல் செய்ய கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை எனவும் கூறி, சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், சபாநாயகர் பேச்சு வெளியான மறுநாள் அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் அமைச்சர் பதவிக்காக அப்பாவு இதுபோன்று பேசியிருக்கிறார் என்று கூறியிருக்கிறாரே தவிர கட்சிக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தெரிவிக்கவில்லை எனவும் ஜெயக்குமாரும் எந்த அவதூறு வழக்கையும் தாக்கல் செய்யவில்லை என்றும் நீதிபதி சுட்டிக் காட்டி இந்த வழக்கை முடித்து வைத்தார்.