தமிழகச் சட்டப்பேரவையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், நிதியமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு குறித்த சர்ச்சை பேரவையில் காரசாரமான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்தபோது, நிதியமைச்சர் தமிழில் சில எண்களைத் தவறாக உச்சரித்தது, ஆங்கிலம் கலந்து பேசியது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.
இன்றைய பேரவை நிகழ்வின் போது பேசிய கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரன், நிதியமைச்சர் தமிழில் நன்றாகப் பேசுவதற்கு அமைச்சர் ராஜ்மோகனிடம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார். தனது மொழி நடை குறித்துப் பேசப்பட்டதால் ஆத்திரமடைந்த நிதியமைச்சர் மரிய வில்சன், உடனடியாகப் பதிலடி கொடுத்தார்.
சமீபகாலமாக உருவக்கேலி, சாதி மற்றும் பெண்கள் சார்ந்த விமர்சனங்களைத் தொடர்ந்து தற்போது மொழி சார்ந்த விமர்சனங்களும் எழுப்பப்படுவதாகச் சாடிய அமைச்சர், "எனது கிறிஸ்துவ நம்பிக்கை எனக்கு அன்பையும், அமைதியையும், இரக்கத்தையும் கற்றுக் கொடுத்துள்ளது; இது தமிழ் கற்றவர்களுக்குக்கூடத் தெரியாது" எனக் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த இரு மாதங்களில் நடத்தப்பட்ட துறை சார்ந்த கூட்டங்கள் மூலம் அரசு கருவூலத்திற்கு ரூ.15,000 கோடி நிதி ஈட்டப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அதைப் பற்றிப் பேசாமல் மொழி நடையைக் குறை கூற வேண்டாம் என்றார். "இதுவே எனது தனித்துவமான நடை. பிறருக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது, நான் இப்படித்தான் பேசுவேன். கேலி செய்கிறீர்களா?" எனக் கோபத்துடன் அமர்ந்தார்.
நிதியமைச்சரின் கோபமான பதிலைத் தொடர்ந்து பேசிய திமுக மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, திமுக எம்எல்ஏ பேச்சுக்கு விளக்கம் அளித்தார்.
அமைச்சர் பேசும் வழக்கு தமிழில் எவ்விதத் தவறும் இல்லை எனக் குறிப்பிட்ட எ.வ.வேலு, கடையநல்லூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் சட்டமன்றத்திற்குப் புதியவர் என்பதால் அவரது பேச்சை நிதியமைச்சர் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனக் கூறினார். மூத்த உறுப்பினர்கள் யாராவது அவ்வாறு பேசியிருந்தால் கோபப்படுவதில் நியாயம் உண்டு எனக் கூறிய அவர், நிதியமைச்சர் தனது வழக்கமான பாணியிலேயே தொடர்ந்து பேசலாம் எனத் தெரிவித்து அமைச்சரை சமாதானம் செய்தார்.