அரசியல்

தவெக-விற்கு ஆதரவா? விசிக உயர்மட்டக் குழு இன்று மாலை அவசர ஆலோசனை!

By Christon
08 May 2026, 01:26 PM
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது இறுதி முடிவை நாளை அறிவிக்கவுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது இறுதி முடிவை நாளை அறிவிக்கவுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெற திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது குறித்துப் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது குறித்து சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஜூம் மீட்டிங் மூலம் கருத்து கேட்பு

தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று குறிப்பிட்ட திருமாவளவன், இன்று மாலை கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் இணையவழியில் (Zoom Meeting) நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்தை அறிந்த பிறகே ஒரு ஜனநாயக ரீதியான முடிவை எடுக்க முடியும் என்றும், அந்த முடிவு நாளை காலை பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இடையூறாகவோ திமுக இருக்காது

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடனான நேற்றைய சந்திப்பு குறித்துப் பேசிய திருமாவளவன், "நாங்கள் நீண்டகாலமாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பயணித்து வருகிறோம். தவெக ஆட்சி அமைப்பதற்குத் தடையாகவோ அல்லது இடையூறாகவோ திமுக இருக்காது என்று ஸ்டாலின் எங்களிடம் உறுதி அளித்துள்ளார். மக்களின் தீர்ப்புக்குத் தலைவணங்க வேண்டியது நமது கடமை என்று அவர் பெருந்தன்மையுடன் தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டார்.