Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

ஆளுநரை தவிர்த்து பட்டம் பெற்ற மாணவி.. திமுகவின் 'தரங்கெட்ட நாடகம்' என அண்ணாமலை தாக்கு!

By Christon
13 Aug 2025, 04:21 PM
ஆளுநர் ஆர்.என்.ரவியை தவிர்த்து பட்டம் பெற்ற மாணவியின் செயல், தி.மு.க.-வின் அரசியல் நாடகம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவியை தவிர்த்து பட்டம் பெற்ற மாணவியின் செயல், தி.மு.க.-வின் அரசியல் நாடகம் என பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆளுநரை தவிர்த்த மாணவி

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா, இன்று நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். அப்போது, நாகர்கோவிலைச் சேர்ந்த பி.ஹெச்.டி. மாணவி ஜீன் ஜோசப், ஆளுநரைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். அவரது இந்தச் செயல், விழா மேடையில் இருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவியின் விளக்கம்

ஆளுநரை தவிர்த்ததற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜீன் ஜோசப், "தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால், அவரிடம் பட்டம் பெற எனக்கு விருப்பமில்லை. அதன் காரணமாகவே துணைவேந்தரிடம் பட்டத்தைப் பெற்றுக்கொண்டேன்” என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர், தனது கணவர் ராஜன், நாகர்கோவில் மாநகர தி.மு.க. துணைச் செயலாளராக இருக்கிறார் என்று குறிப்பிட்டார்
.
தி.மு.க. மீது அண்ணாமலையின் குற்றச்சாட்டு

இந்தச் சம்பவத்தை கடுமையாகச் சாடிய அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில், "நாகர்கோவில் மாநகர தி.மு.க. துணைச்செயலாளர் ராஜன் என்பவரின் மனைவி ஜீன் ஜோசப், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். கட்சியில் பெயர் வாங்க, தி.மு.க.-வினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கட்சியினருக்கு இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை எல்லாம் கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். தி.மு.க.-வைப் பிடிக்காத மக்களும் இதேபோன்று நடந்து கொண்டால், அவர் தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.