அரசியல்

உட்கட்சி அதிருப்தியா? CPI மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் இணைவு ...

By Sumalekha
18 Jun 2026, 07:25 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவர் சி.மகேந்திரன், இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் உறுப்பினராக இணைந்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தவெகவில் இணைந்த பிறகு பேசிய சி.மகேந்திரன், “ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை முதல்வர் விஜய் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார். சாதி, மதம், பண பலம் ஆகியவற்றைக் கடந்து சாதாரண மக்களுக்கும் அரசியலில் வெற்றி பெறும் வாய்ப்பை இந்தத் தேர்தல் உருவாக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், “ஒரு சாதாரண குடிமகனும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை விஜய் நிரூபித்துள்ளார். இதை ஜனநாயகத்தின் ஒரு புரட்சியாகவே பார்க்கிறேன். காந்தி, பெரியார், அம்பேத்கர் கனவு கண்ட சமூக மாற்றத்திற்கான விதை தற்போது விதைக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

எளிய மக்களுக்கான அரசியல் இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் வளர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தாம் இணைந்துள்ளதாகவும், பொதுவுடமை சிந்தனைகள் மேலும் வலுப்பெற தவெகவில் பணியாற்றுவேன் என்றும் சி.மகேந்திரன் உறுதியளித்தார்.

சி.மகேந்திரன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழகச் செயலாளராக பணியாற்றியவர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டதுடன், பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக கட்சிச் செயல்பாடுகளில் இருந்து விலகியிருந்த அவர், சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துகளும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் உட்கட்சி முரண்பாடுகளே அவரது இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், இடதுசாரி அரசியலில் நீண்ட காலம் பயணித்த ஒரு மூத்த தலைவர் தவெகவில் இணைந்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.