அரசியல்

"பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM"- தவெக அரசு மீது உதயநிதி கடும் தாக்கு!

By Christon
26 May 2026, 11:31 AM
"பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்" என்று தவெக அரசை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் விஜய் நேற்று (மே 25) அறிவித்திருந்தார். ஆனால், தவெகவில் தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் விஜயின் இந்த அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில், பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அரசை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.

இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.

இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.