Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

மகளிருக்கு ரூ.2,500, ஒரு சவரன் தங்கம்.. தவெக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்!

By Christon
16 Apr 2026, 05:24 PM
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 'மக்களின் தேர்தல் அறிக்கை' என்ற பெயரில் அதிரடியான 10 அம்ச முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தலைவர் விஜய், ஏழை எளிய மக்கள் மற்றும் மாணவர்களின் நலனை முன்னிறுத்திப் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளார். கல்வி, விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கான சலுகைகள்

ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் தரமான பட்டுச்சேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 60 வயதுக்கு உட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் எனவும் 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ரூ.25 லட்சம் மதிப்பிலான உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை விஜய் உறுதி அளித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புரட்சி

மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 100 காமராஜர் பள்ளிகள், உயர்கல்விக்கு பிணையில்லா கடன் மற்றும் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.4,000 வரை மாதாந்திர நிவாரணம் போன்ற திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்கச் சட்டம் இயற்றப்படும் என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

விவசாயம் மற்றும் மீனவர் நலன்

5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் விஜய் அறிவித்துள்ளார். மேலும், அனைத்து மீனவர்களுக்கும் வீடு கட்டித் தரும் 'லட்சிய வீடு' திட்டமும் அவரது தேர்தல் அறிக்கையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.