அரசியல்

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயார் - செல்லூர் ராஜு குமுதத்திற்கு பரபரப்பு பேட்டி

By Jayakumar
08 Apr 2025, 04:23 PM
அமைச்சர் துரைமுருகன் சொன்ன கருத்தை நிரூபித்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்ய தயார் என செல்லூர் ராஜு தெரிவித்தார்.

அமைச்சர் பதில்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. தென் பகுதியிலும் புறவழிச்சாலை அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளுத்த அமைச்சர் எ.வ.வேலு, தென்பகுதியில் இருக்கின்ற மதுரைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நகர பகுதியில் இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கோரி பாளையம் பாலம், அப்போலோ பாலம் என இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தென் பகுதியில் புறவழிச்சாலை அவசியம்தான். அது சம்பந்தமாக துறையின் சார்பில் ஆய்வில் உள்ளது. ஆய்வு முடிந்த பிறகு முதலமைச்சரிடம் எடுத்து சென்று இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பதவியை ராஜினாமா செய்ய தயார்

இதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர்களிடம் முன் வைத்தனர். இதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இந்த நிலையில், அதிமுக ஆட்சி காலத்தில் நியாய விலை கடைகளில் வழங்கிய அரிசி தரமற்றது எனவும், கோழிகளுக்கு தீவனமாகதான் அதனை நாங்கள் வழங்கினோம் என அவை முன்னவரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கருத்து தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் குமுதத்திற்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சொன்ன கருத்தை நிரூபித்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்ய தயார் என தெரிவித்தார்.