பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது 88-வது பிறந்தநாளில் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். மருத்துவராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுத்த அவரது நீண்டகாலப் பயணத்தை இங்கு காண்போம்.
விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவரி கிராமத்தில் பிறந்த ராமதாஸ், திண்டிவனத்தில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் வழங்கி ‘கைராசியான டாக்டர்’ என்று பெயர் பெற்றார். காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட இவர், 1980-ல் வன்னியர் சங்கத்தை அமைத்துத் தனி இடஒதுக்கீட்டுக்காகப் போராடினார். அதன் தொடர்ச்சியாக 1989-ல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு 'எம்.பி.சி' பிரிவு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 1989 ஜூலை 16-ல் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கினார்.
தேர்தல் அரசியலைத் தாண்டி, ஈழத்தமிழர் ஆதரவு, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கான ஆதரவுக் குரல் என மொழி, மாநில உரிமைகளுக்காகத் தீவிரமாகச் செயல்பட்டார். தனது கட்சியில் பட்டியலினத்தவரே பொதுச்செயலாளராக வர முடியும் என்ற விதியைக் கொண்டுவந்தது, மது ஒழிப்புப் போராட்டங்கள், சமச்சீர் கல்வி ஆதரவு ஆகியவை இவரது முக்கியச் சாதனைகளாகக் கருதப்படுகின்றன.
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு பின்னர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது, குடும்பத்தினருக்குப் பதவி இல்லை என்று கூறி மகனை மத்திய அமைச்சராக்கியது போன்றவை இவர் மீது வைக்கப்பட்ட பிரதான விமர்சனங்கள் ஆகும்.
அதேபோல, கடந்த 2 ஆண்டுகளாக ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே தீவிரமான கட்சி மோதல் நிலவி வந்தது. இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கியதுடன், நீதிமன்ற வழக்குகள் வரை பிரச்சினை சென்றது. கடந்த ஜூன் 24 அன்று தைலாபுரம் தோட்டத்தில் இருவரும் நேரில் சந்தித்துச் சமரசம் செய்துகொண்டதைத் தொடர்ந்து, இவ்வழக்குகள் முடிவுக்கு வந்தன. இந்நிலையில்தான், தற்போது அவர் தனது அரசியல் துறவறத்தை முறைப்படி அறிவித்துள்ளார்.