Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

87 வயது ஆகிவிட்டதால் ராமதாஸால் முடிவெடுக்க முடியாது; நீதிமன்றத்தில் அன்புமணி மனு!

By Christon
09 Mar 2026, 11:46 AM
ராமதாஸ்க்கு வயது மற்றும் மருத்துவ காரணங்களால் அவரால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை" என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அன்புமணி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பாமகவின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த அன்புமணிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், தன்னைத் தலைவராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி ராமதாஸ் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருந்தார். இதற்குப் பதிலடியாக, அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் பல அதிரடி வாதங்களை முன்வைத்துள்ளார்.

நிர்வாக முடிவுகளும் உடல்நிலையும்

அன்புமணி தனது மனுவில், ராமதாஸிற்கு தற்போது 87 வயது ஆகிவிட்டதாகவும், வயது மற்றும் மருத்துவக் காரணங்களால் அவரால் சுயமாக நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சிலர் அவரைத் தவறாக வழிநடத்தி வருவதாகவும், சில தனிநபர்கள் கட்சிக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சி விதிகளும் அதிகாரமும்

பாமகவின் சட்ட விதிகளின்படி பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம் கொண்டது என்று குறிப்பிட்டுள்ள அன்புமணி, ராமதாஸ் தன்னைத் தலைவராக அறிவித்துக்கொண்டது கட்சி விதிகளுக்கு உட்பட்டது அல்ல என்று வாதிட்டுள்ளார். நிறுவனர் என்ற அடிப்படையில் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் மட்டுமே வழங்க முடியும் என்றும், கட்சி விதிகளில் மாற்றம் செய்தது குறித்துத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பது அன்புமணியின் வாதமாக உள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவு

இந்த விவகாரத்தை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், அன்புமணியின் மனு குறித்து ராமதாஸ் வரும் மார்ச் 11-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினமே ராமதாஸ் தொடர்ந்த பிரதான வழக்கின் விசாரணையும் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்த கடிதம் மற்றும் கட்சித் தலைமைப் பதவி தொடர்பான இந்த சட்டப் போராட்டம் பாமக தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.