மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் பதவி விலக வலியுறுத்தி திமுக மாணவரணி நடத்தவிருந்த மாநில தழுவிய போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னையில் போராட்ட ஏற்பாடுகளைச் செய்த திமுகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று தமிழகம் முழுவதும் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று காலையிலேயே திமுகவினர் மேடை அமைத்தல், ஒலிபெருக்கிகள் பொருத்துதல் போன்ற போராட்டத்திற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து வந்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி ஏற்பாடுகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டனர்.
இதனால் போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே மேடையிலேயே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுப் பதற்றம் நிலவியது. அதைத்தொடர்ந்து, தடையை மீறி அனுமதியின்றி போராட முயன்றதாகக் கூறி, அங்கிருந்த 20-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் குண்டுகட்டாகக் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பிய நிலையில், அமைக்கப்பட்டிருந்த மேடை மற்றும் ஸ்பீக்கர்கள் அனைத்தும் அங்கிருந்து முழுமையாக அகற்றப்பட்டன.