அரசியல்

4 மாநிலங்களில் வாக்காளர் அட்டை? - பிரகாஷ் ராஜ் விளக்கம் !

By Sumalekha
22 Jun 2026, 08:36 PM
4 மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக பரவிய தகவல் மற்றும் பிடிவாரண்ட் விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ், 4 மாநிலங்களிலும் தனது பெயரில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்த வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பெங்களூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள பிரகாஷ் ராஜ், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்.

இந்நிலையில், தமிழ்நாடு. கர்நாடகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் தனது பெயரில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்த வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பெங்களூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ஒரு நபருக்கு. ஏதாவது ஒரு இடத்தில் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிரகாஷ்ராஜிடம் 4 வாக்காளர் அட்டை இருப்பதாக கூறப்படுவதால், அதுபற்றி பெங்களூருவை சேர்ந்த வக்கீலான திலீப்குமார் என்பவர் போலீஸ் நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார் அளித்தார் என்றும், இதையடுத்து, நடிகர் பிரகாஷ்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெங்களூரு 48-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் திலீப்குமார் தனிநபர் வழக்கு தொடர்ந்தார் என்றும் தகவல் பரவின.

மேலும், வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டும், விசாரணைக்கு ஆஜராகும்படி பிரகாஷ்ராஜுக்கு 2 முறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராக ஜாமீன் இல்லாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், பிடிவாரண்ட் குறித்த செய்தியை பகிர்ந்த பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “போலியான செய்திகளை தயாரித்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வேலையில் அவர்களை மும்முரமாக வைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், தமக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக வெளியான தகவலை பிரகாஷ் ராஜ் மறுத்துள்ளார்.