அரசியல்

தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரி விமர்சனம்!

By Christon
17 Feb 2026, 04:27 PM
2026-2027ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் அனைத்தும் வெறும் வார்த்தை ஜாலங்கள் என்றும், நிதி மேலாண்மையில் அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

"மேனா மினுக்கி உரை" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த பட்ஜெட் விவசாயிகளையும் மக்களையும் ஏமாற்றும் செயல் என்று விமர்சித்தார். "இது வெறும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினுக்கி உரையே தவிர, உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை. வெளியே அழகாகத் தெரிந்து உள்ளே சொத்தையாக இருக்கும் அத்திப்பழத்தைப் போன்றது இந்த பட்ஜெட். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக அரசு கூறுவது முற்றிலும் பொய். மக்களுக்கு அரசு காது குத்தியுள்ளது" என்று விமர்சித்துள்ளார்.

"வெற்றுப் பெருமை பத்திரம்"- நயினார் நாகேந்திரன் சாடல்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "இன்று தாக்கல் செய்யப்பட்டது திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் அல்ல, அது ஒரு வெற்றுப் பெருமை பத்திரம். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றத்திற்குப் பழகிப்போன மக்களுக்கு, இந்த பட்ஜெட்டும் ஒரு ஏமாற்றத்தையே தந்துள்ளதே தவிர வேறில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

கடன் சுமை குறித்த அன்புமணி அதிருப்தி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் கடன் சுமை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். "கடந்த 70 ஆண்டுகளில் வாங்கப்பட்ட ஒட்டுமொத்த கடனை விட, திமுகவின் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் அதிகக் கடன் வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் ரூ. 1.27 லட்சம் கடன் சுமையை இந்த அரசு ஏற்றியுள்ளது" என்று அவர் சாடியுள்ளார்.