அரசியல்

விஜய் கட்சி தொடங்கியதே இதற்காக தான்.. அரைத்த மாவு வீணாகிவிடும் - முத்தரசன்

By leninakathiya
05 Nov 2024, 05:00 AM
விஜய் கட்சி தொடங்கியதே திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே என்றும் அவரது கொள்கை என்பது அரைத்த மாவையே அரைப்பது போன்றது என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “காவிரி டெல்டா பாசன பகுதியில் சம்பா சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்ற வரும் நிலையில், விவசாயிகளுக்கு தேவையான பயிர் கடன்களை அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் வழங்க வேண்டும். நகை கடன்கள் வழங்க வேண்டும்.

உரம், பூச்சி, மருந்து ஆகியவை அதிக விலைக்கு வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரம் பூச்சி மருந்துகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்" என தெரிவித்தார்.

அப்போது நடிகர் விஜய், திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறாரே என கேட்டதற்கு, கட்சி தொடங்கப்பட்டதே திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே என முத்தரசன் தெரிவித்தார். விஜய்யுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைக்குமா? என கேட்டதற்கு, அவ்வாறு வைக்கும் போது தங்களிடம் தெரிவிப்பதாக முத்தரசன் கூறினார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என நடிகர் விஜய் தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா. அப்பொழுது பார்ப்போம். அவர் அரைத்த மாவையே அரைத்து வருகிறார். மாவு வீணாகிவிடும்’ என பதில் அளித்தார்.

தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளியோடு இணைக்கப் போவதாக கூறப்படுகிறதே என கேட்டதற்கு, காமராஜர் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த தொடக்கப் பள்ளிகளை மூடக்கூடாது என்றும் முத்தரசன் தெரிவித்தார்.