Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

கீழடிக்கு ஆதரவாக அதிமுக வாய் திறக்காதது அதிர்ச்சியளிக்கிறது- கரூர் எம்பி ஜோதிமணி

By MUTHUKRISHNAN
20 Jun 2025, 10:16 AM
”கீழடிக்கு ஆதரவாகவோ, அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாகவோ அதிமுக மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாநகராட்சிக்கு உட்பட்ட தொழிற்பேட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு அனைவருக்கும் உணவு பரிமாறினார். அதைத் தொடர்ந்து, அங்குள்ள முதியோர்கள் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடி ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. ஜோதிமணி, "அகழ்வாராய்ச்சி விதிகளின்படி, கீழடியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பினை பயன்படுத்தியதற்கான ஆதாரம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு மகிழ்ச்சி அடைய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் தான் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. பாஜக தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது.

பணியிடமாற்றம் என்கிற பெயரில் தொடர்ந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வேட்டையாடப்பட்டு வருகிறார். மதுரையிலிருந்து டெல்லி, அங்கிருந்து அமர்நாத், அங்கிருந்து கோவா, கோவாவிலிருந்து டெல்லி, சென்னைக்கு மாற்றி, மீண்டும் டெல்லிக்கு மாற்றி இப்போது நொய்டாவிற்கு மாற்றியுள்ளார்கள். ஒரு தமிழர், மரியாதைக்குரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர், அவரது குழுவினர் ஆய்வின் அடிப்படையில் கண்டுபிடித்துள்ளார்கள் என்பதற்காக பாஜக அரசு அவரை வேட்டையாடுகிறது என்பதை ஏற்க முடியாது."

பாஜகவிற்கு திடீர் தமிழ் மக்கள் மீது பற்று:

”சரஸ்வதி நதி ஓடுகிறது என்கிறார்கள், ராமர் பாலம் இருக்கிறது என்கிறார்கள், பாஜக ஆதரவு கவர்னர் ஒருவர் சொல்கிறார், ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிக்கவில்லை. பரத்வாஜ் முனிவர் தான் கண்டுபிடித்தார் என்கிறார். இதற்கெல்லாம் வரலாற்றுபூர்வமான சான்றுகள் இருக்கிறதா? ஆனால், வரலாற்று ஆய்வுகளின் படி கீழடி அறிக்கை சமர்பித்தால், அதில் போதிய தகவல் இல்லை. திருத்தி வழங்குங்கள் என திருப்பி அனுப்புகிறார்கள்.

பாஜகவுக்கு திடீரென தமிழ் மக்கள் மீது பற்று வந்து விடுகிறது. உடனே முருகன் மாநாடு நடத்துகிறார்கள். நீங்கள் என்ன வேடம் அணிந்து வந்தாலும் தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இதன் மூலம் பாஜக வெளிப்படுத்துகிறது. கீழடிக்கு ஆதரவாகவோ, அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாகவோ அதிமுகவோ, அதன் பொதுச்செயலாளரோ இதுவரை வாய் திறக்கவில்லை. இது வருத்தமளிக்கக் கூடிய விஷயம். தமிழ்நாட்டை சார்ந்த அதிமுக கட்சி மௌனமாக பாஜகவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது அதிர்ச்சியளிக்கிறது" என குறிப்பிட்டார் எம்.பி ஜோதிமணி.