அரசியல்

மார்க்கண்டேயன் கைது... த.வெ.க. அரசை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்!

By Sumalekha
20 Jul 2026, 01:53 PM
விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசியதாக கூறி கைது நடவடிக்கை குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜயை குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சட்டமன்றத்திற்குள் விஜய் வந்தால் எலும்பை உடைப்போம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து த.வெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் இன்று காலையிலேயே அவரை கைது செய்துள்ளனர்.

மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுக கட்சியினர் போலீசாரிடம் எதிர்ப்பு தெரிவித்து அவரைக் கொண்டு செல்ல விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை போலீசார் அழைத்து சென்ற நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் தொடர்ந்து அவரிடம் ஐந்து மணி நேரம் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் செய்தியாளர்கள் 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தடுப்பு அமைத்து நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இதைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் மார்க்கண்டேயனை சந்திக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்னால் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஏராளமான தொண்டர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை கடந்து உள்ளே செல்ல முயன்ற திமுகவினர் மற்றும் காவல்துறையினருக்கிடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து மார்க்கண்டேயனின் கைது குறித்து திமுகவின் தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்து தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது.

ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.

"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?

மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?

ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences என்று பதிவிட்டுள்ளார்.