அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. எஸ்.காமராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி, சட்டமன்ற சபாநாயகரிடம் அமமுக பொருளாளர் கரிகாலன் மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க முயன்ற போது, மன்னார்குடி எம்.எல்.ஏ. எஸ்.காமராஜிடம் இரவோடு இரவாக த.வெ.க-வினர் கையெழுத்து பெற்று, சட்டமன்றத்தில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கக் குதிரை பேரம் நடத்தியதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரிடம் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், த.வெ.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
இருப்பினும், சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, டிடிவி தினகரனின் உத்தரவை மீறி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் வாக்களித்தார். இதன் காரணமாக அவரை அமமுக-வில் இருந்து உடனடியாக நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில், குதிரை பேரத்திற்கு ஆட்பட்டுத் த.வெ.க-விற்கு ஆதரவளித்ததால், சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எஸ்.காமராஜைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அமமுக சார்பில் சட்டமன்ற சபாநாயகரிடம் தற்போது முறைப்படி மனு அளிக்கப்பட்டு நடவடிக்கை கோரப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து அமமுக பொருளாளர் கரிகாலன் மனு அளித்துள்ளார்.