Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

மாம்பழம் சின்னம் விவகாரம்: 3 வாரங்களில் பதிலளிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

By Christon
02 Feb 2026, 12:28 PM
மாம்பழம் சின்னம் தொடர்பாக ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

ராமதாஸின் குற்றச்சாட்டுகள்

கட்சியின் சின்னமான மாம்பழத்தை ஒதுக்கீடு செய்து, அது தொடர்பான கடிதத்தைத் தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸின் முகவரிக்கு அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து ராமதாஸ் தாக்கல் செய்த மனுவில் பல அதிரடி புகார்களை முன்வைத்துள்ளார்.

கடந்த 2025 மே மாதமே அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், போலி ஆவணங்கள் மூலம் அவர் தலைவராக நீடிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவருக்குச் சின்னம் தொடர்பான கடிதத்தை அனுப்பியது சட்டவிரோதம் என்றும், நிறுவனரான தனக்கே அந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டுள்ளார். மாம்பழச் சின்னத்தை முடக்கி வைப்பதாகத் தேர்தல் ஆணையம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாக்டர் ராமதாஸின் மனு குறித்துத் தேர்தல் ஆணையம் 3 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

அன்புமணி தரப்பு கோரிக்கை நிராகரிப்பு

இந்த விசாரணையின் போது அன்புமணி ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜா, இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என்றும், தங்கள் வாதத்தைக் கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். ஆனால், நீதிபதிகள் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். "மனுவில் எதிர் தரப்பினராக இல்லாத போது, உங்களை இணைக்க அனுமதிக்க முடியாது" என்று கூறி அந்தத் தடையை நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.