Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

அவர் பேசியதில் தவறில்லை.. கமலுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

By Jayakumar
06 Jun 2025, 06:38 PM
கமல்ஹாசன் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை எனவும் படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அமமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் இல்ல திருமண விழாவில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

மணமக்களை வாழ்த்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 8 ஆம் தேதி மதுரை வருகிறார். அதே தேதியில் திருச்சியில் நடைபெறும் கட்சி நிர்வாகி பாபு என்பவரது இல்ல திருமண விழாவிற்கு செல்ல தேதி கொடுத்துள்ளேன். மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதா? இல்லையா? என்ன செய்வது என்று தெரியவில்லை.

மத்திய அமைச்சர் அமித்ஷா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியில் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செயல்பட்டு, திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.

திமுகவை ஆட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவது மூலம் திமுக எதிர்ப்பு வாக்குகளை பெற்று, மாபெரும் வெற்றி பெற முடியும் என்பது தான் எனது கோரிக்கை" என்றார்.

கன்னடம் குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்து சர்ச்சையானது குறித்த கேள்விக்கு, "கமல்ஹாசன் சிறந்த நடிகர். ஒரு படத்தில் நடித்து வெளியிடும் நேரத்தில், இது போன்ற கருத்துகளை சொல்லாமல் அவர் ததவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மற்றபடி அவர் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை" எனத் தெரிவித்தார்.