Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

மக்களை வஞ்சிக்கும் கலைஞரின் கனவு இல்ல திட்டம்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

By nishika
17 Nov 2024, 03:27 AM
“அதிமுக ஆட்சி காலத்தில் அம்மா சிமெண்ட் மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்டது. ஆனால் அதே சிமெண்ட் இப்போது 285 ரூபாய்க்கு விற்கப்படுவது மக்களை வஞ்சிக்கும் செயலாகும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் வீடு இல்லாதவர்களுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அரசு தெரிவித்தது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து கிராமப் பகுதிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு மொத்த தொகையாக மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் கழிப்பறை கட்டுவதற்காக 12 ஆயிரம் ரூபாயும், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் (NGNRGS) பணி செய்யும் நபருக்கு 314 ரூபாய் விதம் 10 நாட்களுக்கு 26 ஆயிரத்து 260 ரூபாயும், மீதமுள்ள மூன்று லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் 4 கட்டங்களாக வீடு கட்டும் நபருக்கு கொடுக்கப்படும். இவ்வாறு சுட்டப்படக்கூடிய வீடுகளுக்கு முதல் கட்டப் பணி முடிந்த உடன், வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தவுடன் நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் மூன்றாவது கட்ட பணி முடிந்த பின்னும், முதல் கட்ட பணிக்கான பில்லுகளுக்கான தொகையினை கொடுக்காமல் தாமதப்படுத்துகிறார்கள். இதனை வாங்குவதற்கு பல பிரச்சனைகளை சந்திக்கும் அவல நிலை உள்ளது. 

சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்கள் எளிதில் பயன்படக்கூடிய அளவில் அம்மா சிமெண்ட் மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்டது. அனைத்து மக்களும் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது அதே சிமெண்ட் 285 ரூபாய்க்கு வாங்கிக் கட்ட வேண்டிய அவல நிலை உள்ளது. சில தனியார் சிமெண்ட் மூட்டைகள் இந்தத் தொகைக்கும் கீழ் கிடைப்பதால், அதை வாங்கி பயன்படுத்தினால் பணம் கொடுக்க மாட்டோம் எனப் புறக்கணிக்கிறார்கள். கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு அரசு சிமெண்ட் பயன்படுத்துவதால் சிமெண்டின் விலை மற்ற சிமெண்ட்களை காட்டிலும் குறைவாக இருந்தால் அனைத்து பொதுமக்களும் பயன்படும் வகையில் அமையும். எனவே அரசு உடனடியாக சிமெண்டின் விலையை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

அதேபோல் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டும் ஏழை, எளிய மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டுமான தொகைக்காக பில்லுகளோடு பல நாட்கள் அலைய விடுவது மிகவும் மோசமான செயலாகும். பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வீடு கட்டி குடியேற கலைஞரின் கனவு இல்லத்திட்டம் உதவும் வகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மெத்தன போக்கை கைவிட்டு, உடனே நிதியினை ஒதுக்கி மக்களின் சிரமத்தை குறைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வெறும் வாக்குறுதிகளை மட்டும் அளித்து விட்டு, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கடுமையாக கண்டிப்பதுடன், இந்த நிதியின் மூலம் பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் வீடு கட்டி குடியேற இந்த அரசு ஆவணம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.