செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இரண்டாவது நாளில் எங்கள் மீது கடுமையான அழுத்தம் வந்ததால் மீண்டும் பேச்சுவார்த்தைக்குச் சென்றோம். அப்போது, 'திருமாவளவனை முதல்வராக்கும் முயற்சி நடைபெறுகிறது' என்று கூறினார்கள். உடனே நான், 'அவர் எம்.எல்.ஏ. கூட இல்லையே' என்று கேட்டேன். அதற்கு, 'ஆறு மாதங்களில் எம்.எல்.ஏ. ஆக்கிவிடலாம்' என்றனர். அதை யார் ஏற்றுக்கொள்வார்கள்? எப்படி சாத்தியமாகும்? என்று நான் கேள்வி எழுப்பினேன். அதற்கு மேல் அந்த விவகாரம் குறித்து நான் எதுவும் பேசவில்லை" என்றார்.
மேலும், "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது சமூகத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சி. தற்போதைய சூழலில் அங்கு தொடர்வது சரியாக இருக்காது என்று மேல்மட்டக் குழுவைக் கூட்டி ஆலோசனை நடத்தினோம். அதன் பின்னர்தான் தவெகவில் இணைவது என்று ஒருமனதாக முடிவு செய்தோம். இந்த முடிவை அரசியல் ஆலோசனைக் குழுவிடமும் தெரிவித்தோம். அவர்களும் ஒப்புதல் அளித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்பட்டது" என்று விளக்கினார்.
அதோடு, "அமைச்சரவை பொறுப்பில் இணைவதற்கு முன்பு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, இந்த முடிவை தெரிவித்தேன். அதற்கு அவர், 'நன்றி அண்ணா... வாழ்த்துகள் அண்ணா' என்று கூறினார். அதற்கு மேல் என்ன செய்ய முடியும்?" என காதர் மொய்தீன் தெரிவித்தார்.