Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

"அதெல்லாம் அவ்வளவு'வொர்த்' கிடையாது"- குடும்பப் பிரச்னை குறித்து விஜய் ஓபன் டாக்!

By Christon
07 Mar 2026, 06:08 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது குடும்ப வாழ்க்கை குறித்துச் சமூக வலைதளங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மகளிர் தின விழாவில் மறைமுகமாகப் பதிலளித்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், சென்னை நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை விஜய் அனுமதிக்க மறுப்பதாகச் சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இத்தகைய சூழலில், மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் விஜய் பேசிய வார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தொண்டர்களுக்கு விஜய் விடுத்த வேண்டுகோள்

விழாவில் மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த பின் பேசிய விஜய், சமீபகாலமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியாகும் செய்திகள் மற்றும் அதனால் தொண்டர்கள் படும் வேதனையைக் குறித்துப் பேசினார். "சமீபத்தில் நிறைய பிரச்சனைகளோடு சில பிரச்சனைகளும் ஓடிக்கொண்டிருக்கிறது இல்லையா? அதற்காக நீங்கள் போராடி காயப்படுவதை (Hurt) நான் பார்க்கிறேன். அதைப் பார்த்து எனக்கும் வருத்தமாக இருக்கிறது. அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

"ஒர்த் கிடையாது" - சங்கீதாவைக் குறிப்பிடுகிறாரா விஜய்?

தொடர்ந்து பேசிய அவர், "நானும் நீங்களும் சேர்ந்து மக்கள் பிரச்னைகளை மட்டும் பார்ப்போம். அவ்வளவு எல்லாம் காயப்படாதீர்கள். அதெல்லாம் அவ்வளவு 'வொர்த்' (Worth) கிடையாது. நல்லதே நடக்கும்," என்று குறிப்பிட்டார். விஜய்யின் இந்த 'வொர்த் கிடையாது' என்ற வார்த்தை, விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ள அவரது மனைவி சங்கீதாவையும், அவர் முன்வைக்கும் புகார்களையும் மறைமுகமாகச் சாடுவது போல் உள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விவாதமாகும் விஜய்யின் பேச்சு

விஜய் தனது தனிப்பட்ட பிரச்சனைகளைத் தானே கையாள்வதாகக் கூறியிருந்தாலும், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் சங்கீதாவைத் தாக்கும் வகையில் இருப்பதாக ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். அதே சமயம், வதந்திகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் பணிகளில் கவனம் செலுத்துமாறு தனது தொண்டர்களை அவர் அறிவுறுத்தியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.