Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

மக்களை மாடுகள் போல் நடத்துகிறார்.. விஜய் மீது இஸ்லாமிய ஜமாத் குற்றச்சாட்டு

By nagalekshmi
10 Mar 2025, 01:34 PM
மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்துவதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு இஸ்லாமியர்களுடன் இணைந்து சிறப்புத் தொழுகையில் பங்கேற்று நோன்புக் கஞ்சி குடித்தார். இந்த நிகழ்ச்சியில் 3,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மீது  வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “தவெக சார்பில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க: விஜய் கலந்து கொண்ட நோன்பு நிகழ்ச்சி.. லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த நிர்வாகிகள்

இஃப்தார் நிகழ்ச்சியில் நோன்புக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத குடிகாரர்களும், ரவுடிகளும் கலந்து கொண்டது இஸ்லாமியர்களை கேவலப்படுத்தியதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் உணருகிறது. பண்படுத்துவதற்காக நடத்தப்படும் இஃப்தார் போன்ற நிகழ்ச்சி புண்படுத்தும் விதமாக நடந்தேறியுள்ளது. நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதத்திற்கு கொஞ்சமும் வருத்தம் தெரிவிக்காத விஜய், மனிதத்தன்மையற்ற நபரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கனவே விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாட்டில் எவ்வித சரியான முன்னேற்பாடும் செய்யாததால் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் மாநாட்டிற்கு வந்தவர்கள் பலர் மயக்கமடைந்தனர். இஃப்தார் நிகழ்ச்சியிலும் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யாமல் விட்டதால் அங்கேயும் விபரீதங்கள் நடந்துள்ளது. இதுபோன்ற தேவையற்ற விபரீதங்கள் விஜய் நடத்தும் நிகழ்ச்சியில் நடப்பது தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.

எனவே, மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போன்று நடத்துவதாலும், மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாத வெளிநாட்டு பாதுகாவலர்களை வைத்துக் கொண்டு அலைவதாலும் இதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இனியொரு முறை இதுபோன்று நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.