Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா?.. நயினார் நாகேந்திரன் கேள்வி

By Jayakumar
17 Jun 2025, 08:08 PM
"ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்களின் உரிமைகளை பறிக்கும் விதம் கட்டண தரிசன முறையை அமல்படுத்தி இருப்பது, திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதித்ததால், அறநிலையத்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், "உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கே தரிசனக் கட்டணம் விதிக்கப்பட்ட கொடூரத்திற்கு மத்தியில், அதனை எதிர்த்து போராடிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கடவுளை தரிசிக்க வந்த சன்னியாசியிடம் படகு சேவைக்கு கட்டணம் வசூலித்த சொந்த மருமகனை சிரச்சேதம் செய்த மன்னர் விஜயரகுநாத சேதுபதி வாழ்ந்த மண்ணில், இப்படி ஒரு அவலம் நேர வேண்டுமா?

சில நாட்களுக்கு முன் "கோயிலுக்கு செல்வது நாகரீக சமுதாயத்தின் வெளிப்பாடு இல்லை" என திமுக அமைச்சர் ஒருவர் உரைத்த நிலையில் தற்போது, வெகு ஜன பக்தர்களின் உரிமைகளை பறிக்கும் விதம் கட்டண தரிசன முறையை அமல்படுத்தி இருப்பது, திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது.

உள்ளூர் வாசிகளுக்குக் கட்டணம் விதித்து பக்தர்கள் கோயிலுக்கு செல்வதைத் தடுக்கும் எண்ணமா? அல்லது உண்டியல் பணத்துடன், மேலும் லாபம் பார்க்கும் எண்ணமா? என்று மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகமும் தவிர்க்க முடியாதது.

இதன் உள்நோக்கம் எதுவாயினும் உள்ளுர் பக்தர்களுக்குக் கட்டணம் விதிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, ஆண்டாண்டுகாலமாக உள்ளுர்வாசிகளுக்கென வழக்கத்தில் இருந்த தரிசன முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.